Thursday, 3 January 2019

தொடுவானம் .....


விக்னேஷும் , ராஜீயும் கூறியதை நம்ப முடியாமலும், ஆச்சர்யத்திலும் டாக்டர் பாலா அமர்ந்திருந்தார். ஆமாம் “டாக்டர்”, பாசிடிவ் தான் வந்துது... முகத்தில் அத்துணை சந்தோசத்தையும் கண்களில் கட்டி இருவரும் சத்யாவை பார்த்துக்கொண்டிருந்தனர். சரி ஒரு ஸ்கேன் பண்ணிட்டு பேசுவோம் என்றவர் ஒரு காகிதத்தில் நாற்பது ஐந்து நாட்கள் கழித்து எடுக்கவேண்டிய ஸ்கேன் பெயரை எழுதி கொடுத்தார்.

அந்த பெரிய மருத்துவமனையில் எல்லோரும் வயிற்றிலும், கையிலுமாக குழந்தைகளை சுமந்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தனர். விக்னேஷும், ராஜீயும் அவர்களை மகிழ்ச்சியோடு பார்த்து ரசித்துக்கொண்டே ஸ்கேன் அறைக்குள்  செல்ல அவர்களின் முறைக்காக காத்திருந்தனர். ஒரு வழியாக அவர்கள் அழைத்துவிட்டார்கள் .. “இங்க ராஜீ யாருங்க?” உள்ளே ஏதோ உருள பயத்துடன், மிகுந்த எதிர்பார்ப்புடன் ராஜீ அந்த அறைக்குள் நடந்தாள். தனக்குள் நடந்திருக்கும் மாற்றத்தை படம் பிடித்து காண்பிக்கப்போகிறார்கள். ஊரிலில் உள்ள எல்லா சாமியையும் துணைக்கு அழைத்துவிட்டு அந்த படுக்கையில் படுத்துக்கொண்டாள். சில பல கருவிகளின் துணைகொண்டு அந்த குட்டி கரு எங்கு உள்ளது என்பதை அந்த மருத்துவர்  ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

உலகமே நிசப்தமானதாய் ஒரு பிரமை. அந்த அறையின் மேற்கூரையில் ஒரு விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. அவள் கோணத்தில் இருந்து, அவளுக்கு அது ஒரு சிவ லிங்கமாய் தோன்ற, அப்படியே மனதோடு ஒரு முறை வேகமாய் சிவபுராணம் சொல்ல ஆரம்பித்திருந்தாள். திடீரென அந்த அறையின் நிசப்தத்தை போக்கி ஒரு சத்தம் ...”டோக், டோக், டோக்” என்று தொடர்ந்து , மீண்டும் மீண்டும் ஒலித்தது.
இத்தனை நிமிட மௌனத்தின் வெளிப்பாடாய் அது தெரிந்தது. அந்த மருத்துவர் ஏதாவது சொல்லுவாரா? என்று அவரின் முகத்தையே பார்த்துக்கிடந்தாள் .. ஆனால் அந்த முகத்தில் எதையும் அறிந்துக்கொள்ள முடியவில்லை. “ரிப்போர்ட் கொஞ்சம் நேரத்துல வந்துடும்”, வெளிய வெயிட் பண்ணுங்க ... என்று கூறி அந்த அறையில் இருந்து அனுப்பிவிட்டனர் .

ஆர்வமாக என்ன ஆச்சு? என்ற கேட்ட விக்னேஷிடம் ,,, தெரில அவங்க ஒண்ணுமே சொல்லல ,,, என்று கூறி மீண்டும் மருத்துவர் என்ன சொல்லுவாரோ என்ற பதற்றத்தில் அமர்ந்திருந்தாள்.
ஒவ்வொரு நிமிடமும் இல்லை, நொடியும் யுகங்களாய் கழிந்தது அன்று. கையில் வாங்கிய ரிப்போர்டை பிரித்து பார்க்கவும் பயம் கொண்டு... அப்படியே மருத்துவர் பாலாவை பார்க்க காத்திருந்தனர்.
கூட்டம் எல்லாம் குறைந்து அவர்களின் முறை வந்ததும் , ரிப்போர்டுடன் உள்ளே நுழைந்தனர். பிரித்து பார்த்துவிட்டு எல்லாம் நன்றாக உள்ளது ,, வாழ்த்துகள் ,,, என்று அவர் கூறிய அந்த ஒரு நிமிடத்தில் உலகின் எல்லா நிலைகளையும் கடந்து விட்ட மனநிலையில் அவர்கள் இருவரும் இருந்தனர். பிறகு அவர் கூறிய அனைத்தும் சம்பர்தாய வார்த்தைகளாகவே தெரிந்தது.

ஆம் ,,, அவர்களின் வாழ்க்கையில் அவள் வந்துவிட்டாள் .. என்னவோ ராஜிக்கு தனக்குள் ஒரு பெண் குழந்தையே உருவாகி இருக்கிறாள் என்று தோன்றியது ... அந்த நாள் முதல் அவர்களின் வாழ்க்கைக்குள் அவளும், அவளின் வாழ்க்கைக்குள் அவர்களும் புகுந்துவிட்டார்கள்....
காலையில், மாலையில், இரவில் என்று எப்போதும் அவளோடு , அவளுக்காய் அவர்களின் வாழ்க்கை சுழன்றது .....

No comments:

Post a Comment